அவசர மனநல உதவிச் சேவைக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்
- TH-Batticaloa
- Nov 5, 2022
- 1 min read

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர மனநல உதவி தொலைபேசி அழைப்புச் சேவை இன்று (02.11.2022) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி கலாரஞ்சனி கணேசலிங்கம் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுகாதார அமைச்சினால் 2018ம் ஆண்டில் அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை இந்த ஆண்டில் மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நீங்கள் 1926 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுவதன் ஊடாக இந்த அவசர மனநல உதவிச்சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக விசேடமாகப் பயிற்றுவிக்கப்பட்ட ஆளணியினர் தயாராக உள்ளனர்.
நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம்;
உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை எதுவித தயக்கமுமின்றி உரையாடலாம்.
உங்களால் இலகுவில் அணுகக் கூடிய சிகிச்சை நிலையங்கள், சிகிச்சையை அளிக்கக் கூடியவர்கள், சேவைகள் தொடர்பாக அறிந்து கொள்ளலாம்.
உளப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு நெருக்கமான நபர்களுடன் நடந்து கொள்ளும் முறையை அறிந்து கொள்ளலாம்.
சிறுவர் மற்றும் இளையோர் உளநலம் சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறலாம்.
குடும்ப, உறவு முரண்பாடுகள் மற்றும் தொடர்பாடல் சிக்கல்கள் பற்றி உரையாடலாம்
வீட்டு வன்முறை மற்றும் சட்ட உதவிகள் தொடர்பான விளக்கத்தைப் பெறலாம்.
உளநோய்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் பற்றிய அறிவைப் பெறலாம்
இந்த சேவையைப் பெற்றுக் கொள்ள பின்வரும் படிமுறைகளைப் பொறுமையாகப் பின்பற்றவும்.;
1. 1926 இலக்கத்தினை அழுத்தவும்
2. தமிழ் மொழிக்கான சேவைக்கான இல 2 இனை அழுத்தவும்
3. கிழக்கு மாகாணத்துக்கான இலக்கமான இல 2 இனை அழுத்தவும்
4. மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இலக்கமான இல 3 இனை அழுத்தவும்.
கொவிட-19 இற்குப் பின்னரான பொருளாதார நெருக்கடியுடன் கூடிய இன்றைய காலகட்டத்தில் உங்கள் உள்ளங்களையும் உறவுகளையும் வலுப்படுத்த இந்த சேவையினை அணுகுங்கள்.


Comments