top of page

நீங்களும் ஒரு உயிரை காப்பாற்ற முடியும்

  • Writer: TH-Batticaloa
    TH-Batticaloa
  • Oct 15, 2019
  • 5 min read

சற்று சிந்தியுங்கள்! நீங்களும் அன்றாடம் உங்கள் வாழ்வில் இவ்வாறான ஒரு அனுபவத்தைப் பெற்றிருந்தால் ......

உங்கள் வீட்டில், பேரூந்தில், புகையிரதத்தில், வேலைத்தளத்தில், அல்லது கடை வீதியில் உங்களுடைய அன்பான ஒருவருக்கு இதயம் செயலிழக்க நேரிடலாம். சாதாரணமாக கூறினால் உங்கள் கண்முன்னிலையில் அவருடைய உயிர் போகலாம். சற்று சிந்தியுங்கள்! அது மிகவும் வேதனைக்குரிய அனுபவமாக இருக்கும், உங்களுக்கு ஒன்றும் செய்யமுடியாமல் அனாதரவாகத் தவிப்பீர்கள், அதிர்ச்சி அடைவீர்கள், குற்ற உணர்ச்சியில் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகுவீர்கள். ஆனால், இவ்வாறான சந்தர்ப்பத்தில் உங்களுடைய அன்புக்குரியவர்களின் உயிரை பாதுகாக்கக் கூடிய ஒருவர் இருப்பின் உண்மையிலேயே அவர் ஒரு தெய்வம் என நீங்கள் நினைக்கலாம். அவ்வாறான திறமை உள்ள நபர் யார்? இதனால்தான் வைத்தியரைக் கடவுள் என தொன்று தொட்டு மக்கள் நினைத்தார்கள்.


மேற்குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் வைத்தியர் ஸ்தலத்தில் இருக்க முடியாது என்பது தெளிவான விடயம். அதாவது எமது முன்னிலையில் இறந்து போகும் எமது அன்புக்குரியவர்கள் எமது வாழ்க்கையிலிருந்து பிரிந்து போகும் போது நாங்கள் என்ன செய்ய முடியும்.


ஆனால் யதார்த்தம் அதுவல்ல. அவருடைய இதயத்தில் மீண்டும் உயிர் கொடுப்பதற்கு உங்களால் முடியும். வேறு எவரும் தேவையில்லை. நீங்கள் உங்களை நம்புங்கள். இதற்காக நீண்ட கால பயிற்சி எதுவும் தேவையில்லை. மிகவும் சரளமான சில நடவடிக்கைகளை குறித்த நேரத்துக்குள் பிழையின்றி செயற்படுத்துவதன் ஊடாக செயலற்ற இதயத்திற்கு உயிர் கொடுக்க உங்களால் முடியும். அதற்காக உங்களை அறிவூட்டுவதுதான் இந்த தொகுப்பின் நோக்கம்.

திடீர் இதய நிறுத்தம் (Sudden Cardiac Arrest) என்றால் என்ன?


இதயத்தைத் தாக்கக் கூடிய ஏதோ ஒரு வெளியக அல்லது உள்ளக காரணியால் இதயத்தின் தசைப்பகுதியின் துடிப்பை ஆரம்பிக்கும் மின் செயற்பாடு தடைப்படும். இதனால் தசைப்பகுதியின் அசைவு தடைப்படும். அப்பொழுது உடலின் ஏனைய உறுப்புகளுக்குத் தேவையான ஒட்சிசன் மற்றும் சத்துக்களை போதியளவில் பாய்ச்ச முடியாமல் போகும். உடல் முழுவதிலும் உள்ள பாகங்களுக்குத் தேவையான ஒட்சிசன் மற்றும் சத்துக்களை குருதியூடாக பாய்ச்சுவது இதயமாகும். இவ்வாறு குருதி விநியோகம் தடைப்படுவதனால், மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒருவருடைய இதயமும் மூளை போன்ற ஏனைய முக்கிய உறுப்புகளும் மீண்டும் உயிரூட்டப்பட முடியாமல் செயலற்று விடும் அல்லது அவர் மரணமடைவார்.


இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் என்ன செய்ய முடியும்?


இவ்வாறான சந்தர்ப்பத்தில் தடுமாறுவதால், கத்திக் கூச்சலிடுவதால் அல்லது பயப்படுவதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. ஆனால் நோயாளியின் உயிரை பாதுகாப்பதற்கு நீங்கள் காலந்தாழ்த்தாது உடனடியாக செயற்பட வேண்டும். அதற்குக் காரணம், பாதிக்கப்பட்ட இதயத்தை மீண்டும் உயிரூட்டுவதற்காக செலவிடப்படும் ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானது. இதயம் செயலற்ற சந்தர்ப்பத்தில் உடலில் மூளை போன்ற ஏனைய முக்கிய பாகங்களை தாக்கும் முதலாவது காரணி ஒட்சிசன் குறைவாகும். இதனை Hypoxia என குறிப்பிடலாம்.


இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்கு வாழ்வதற்கு மிகவும் முக்கியமான மற்றும் செயற்பாடு அதிகமாக உள்ள பாகங்கள் முதலில் இறந்து போவதற்கு (Vital Organ Dysfunction) ஆரம்பிக்கும். அந்த வகையில் முதலில் செயலற்றுப் போவது மூளையாகும். இங்கு முக்கியமான விடயம் யாதெனில், மூளை செயலற்ற பின்பு ஏனைய சகல உறுப்புகளினதும் உயிர் இருப்பினும் கூட நோயாளிக்கு சாதாரண வாழ்க்கை நிலைக்கு திரும்பமுடியாது போய்விடும். இவ்வாறான ஒரு நோயாளி கோமா போன்று படுக்கையில் செயலற்ற நிலையில் (Vegetative State) நீண்ட காலம் இருப்பார். மூளைக்கு குருதி விநியோகம் தடைப்படுவதனால் ஒட்சிசன் குறைகின்ற போது மூளையின் கலங்களுடைய செயற்பாடு 5 நிமிடங்கள் மட்டுமே தங்கி இருக்கும். இதனால் நாங்கள் மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகளின் நோக்கமும் இதயம் செயலற்றவுடன் மூளைக்குத் தேவையான குருதியளவை பாய்ச்சுவதற்காக செயற்கையாக இதய (மார்பு) அழுத்தத்தை (Cardiac Massage) காலந்தாழ்த்தாது பிரயோகிப்பதாகும்.


நீங்கள் என்ன செய்யவேண்டும்?


முதலில் நோயாளி ஆபத்தான ஒரு இடத்தில் இருப்பின் அவரை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்த வேண்டும். உதாரணமாக, மின் ஒழுகும் இடங்கள், நச்சு இரசாயனப் பொருள் அடங்கிய இடங்கள் போன்றவை ஆபத்தான இடங்களாகும். பின்பு நோயாளியை நேராக மேல்நோக்கியவாறு மல்லாக்க படுக்கவைத்தல் வேண்டும்.


அதன் பின்பு அவர் உங்களுக்கு ஏதாவது அசைவு காட்டுகின்றாரா என்பதை பரிசோதிக்க வேண்டும். அவர் உங்கள் அழைப்புக்கு பதிலளிக்காமல் அல்லது உங்களை நோக்கி பார்க்காமல் நிலைகுலைந்தவர் போன்று இருப்பின் அதனை செயலற்ற நிலை (Unresponsive) எனக் குறிப்பிடலாம். அதன் பின்பு அவர் சாதாரணமாக மூச்சு எடுக்கின்றாரா என மார்பு பகுதியிலும் வயிற்றுப் பகுதியிலும் அசைவுகளை அவதானிப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு நிலைகுலைந்து, செயலற்று, சுவாசம் தடைப்பட்ட அல்லது அசாதாரண சுவாசம் உள்ள ஒரு நோயாளி, இதய நிறுத்தம் (Cardiac Arrest) உள்ளவராக கருதப்படுவார்.


இதய நிறுத்தம் (Cardiac Arrest) உள்ளவராக ஒருவர் கருதப்பட்டவுடன், நீங்கள் உடனடியாக அயலில் உள்ள நபருடைய உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அண்;மையில் எவராவது இருப்பின் அவரை அழைத்து அவசர நோயாளர் காவுவண்டிச் சேவைக்கு (1990) அழைக்குமாறு கோரி, நீங்கள் உடனடியாக மார்பு அழுத்தத்தை (Cardiac Massage) ஆரம்பிக்க வேண்டும். எவரும் அருகில் இல்லாவிட்டால் மாத்திரம் நீங்கள் அவசர நோயாளர் காவுவண்டிச் சேவையை முதலில் அழைத்து விட்டு காலந்தாழ்த்தாது உடனடியாக மார்பு அழுத்தத்தை (Cardiac Massage) ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில், மார்பு அழுத்தத்தை ஆரம்பிக்க காலந்தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடத்துக்கும்; நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உள்ள சந்தர்ப்பத்தில் நூற்றுக்கு 10 வீதம் குறைவடைகின்றது.


இலங்கையின்; எப்பகுதியிலிருந்தும் எந்தவொரு தொலைபேசி இணைப்பினூடாகவும் 1990ஐ அழைத்து இலவசமாக அவசர நோயாளர் காவுவண்டிச் சேவையை உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். குறித்த சேவையில் பயிற்றப்பட்ட முதலுதவியாளர்கள் வருவதனால் நோயாளியின் உயிரைக்காப்பாற்றுவதற்கு அது உதவியாக அமையும். இன்று எல்லோருடைய கையிலும் தொலைபேசிகள் உள்ளன. அதனூடாக 1990 இலவச அவசர நோயாளர் காவுவண்டிச் சேவையைப் பெறமுடியும். இதன் விசேட நன்மை யாதெனில், இடம்காட்டும் தொழினுட்பம் ஊடாக நீங்கள் இருக்கும் இடத்தை பிழையின்றி அறிந்து கொள்ள முடியும். அதனால் உங்களைத் தேடி வரவேண்டிய வழி விபரங்களை அறிவிக்க நேரம் செலவழிக்கத் தேவையில்லை.


பிழையின்றி மார்பு அழுத்தம் கொடுப்பது எப்படி?


நோயாளியை மல்லாக்க படுக்கவைக்க வேண்டும். நோயாளியின் மார்பின் மத்தியில் மார்பெலும்பில் (Sternum) இரு கைகளினதும் உள்ளங்கையை ஒன்றுக்கு மேல் ஒன்றை வைத்து விரல்களை பிணைத்துக்; கொள்ளவும். அதன் பின்பு கைகளை நேராக வைத்து ஒரு நிமிடத்திற்கு 100 – 120 (வினாடிக்கு இரண்டு) என்ற வேகத்தில் மார்பை 5-6 cm ஆழத்துக்கு அழுத்தம் ஏற்படும் விதத்தில் மார்பை கடினமாகவும் வேகமாகவும் அழுத்தவும். அதுவே பயனுள்ள மார்பு அழுத்தம் (Effective Compressions) என அழைக்கப்படுகிறது. நீங்கள் களைப்பு அடைந்தால் தொடர்ந்து செய்வதற்கு உதவியாளர் தேவைப்படும். இல்லாவிடில் நீங்கள் சோர்வடையும்போது செய்கின்ற மார்பு அழுத்தமானது திருப்தியாக இருக்க முடியாது.


வைத்தியர் அல்லாத ஒருவர் இதனை செய்யமுடியுமா?


ஐரோப்பாவில் நடாத்தப்பட்ட ஆய்வுகளுக்கு அமைவாக ஒவ்வொரு 1½ நிமிடத்திற்கு ஒரு நபர்வீதம் இவ்வாறு திடீர் இதய நிறுத்தம் (Sudden Cardiac Arrest) மூலம் இறக்கிறார்கள். எனவே ஐரோப்பாவில் சாதாரண மக்களுக்கு மார்பு அழுத்தம் தொடர்பாக பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக அங்கு வைத்தியர்களால் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய இயக்கமீட்பு சபை (European Resuscitation Council) என்ற அமைப்பு உள்ளது. அவர்களுடைய செயற்பாடானது திடீரென இறக்கின்ற நோயாளிகளின் உயிரை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என ஆய்வு செய்வதும் அதற்குரிய உயிர்காக்கும் பயிற்சிகளை அளிப்பதும் ஆகும். இவ்வாறான திடீர் இதய நிறுத்தம் (Sudden Cardiac Arrest) ஏற்படும் நோயளிகளில் ஏறத்தாள நூற்றுக்கு 20 வீதத்தை அவர்கள் திருப்திகரமாக காப்பாற்றுகின்றனர்.


ஐரோப்பிய இயக்கமீட்பு சபை (European Resuscitation Council - ERC) ஆலோசகராகவும் பங்காளியாகவும் இலங்கையில் செயற்படுவது இலங்கை மயக்கமருந்தியல் மற்றும் அதிதீவிர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் கல்லூரி (College of Anaesthesiologists & Intensivists of Sri lanka) ஆகும். அவர்கள் இலங்கை முழுவதிலும் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.


இதற்காக நடாத்தப்படும் வேலைத்திட்டங்கள் எவை?


தற்பொழுது இலங்கை முழுவதிலும் இது சம்பந்தமான பல வேலைத்திட்டங்கள் நடாத்தப்படுகின்றது. பாடசாலைகள், வேலைத்தளங்கள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், பொதுப்போக்குவரத்து இடங்கள், மதவழிபாட்டுத்தலங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் பலவற்றில் இவ்வேலைத்திட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது. இப்பயிற்சிநெறிகளில் கலந்துகொள்ளும் அனைவரும் இருதயம் செயலிழந்த நபரை இனங்காணும் விதம், அவருடைய இருதயத்தை மீண்டும் செயற்படுத்தும் விதம், செயற்கை சுவாசத்தை பெற்றுக்கொடுக்கும் விதம் மற்றும் ஏனைய முதலுதவி தொடர்பான அறிவை பெறுகின்றனர். இந்த வேலைத்திட்டத்தை மேலும் ஒழுங்காக செயற்படுத்தி பொதுமக்களை அறிவூட்டுதலும் பயிற்றுவித்தலும் எமது நோக்கமாகும். அதனூடாக உயிர்காக்கும் அடிப்படை செயன்முறை தெரிந்தவர்களை பாரியளவில் சமூகத்தில் உருவாக்கி, இலங்கையில் ஏற்படுகின்ற திடீர் மரணத்தை கணிசமான அளவு குறைத்துக் கொள்ளலாம் என நாங்கள் திடமாக நம்புகின்றோம்.


ஐப்பசி 16 – உலக இதய மீளியக்க தினம்


உலகிலுள்ள மயக்கமருந்தியல் வைத்திய நிபுணர்கள் கல்லூரிகள் அனைத்தும் இணைந்து ஐப்பசி 16 ஆம் திகதியை உலக மயக்கமருந்தியல் தினமாக (World Anaesthesia Day) கொண்டாடுவது வழமையாகும். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து, அத்தினமானது உலக இதய மீளியக்க தினம் (World Restar A Heart Day) அதாவது உலகத்தில் செயலிழந்த இருதயங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் தினம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன்போது நாங்கள் குறித்த உயிர்காக்கும் பயிற்சியை நாட்டின் சகல மக்களுக்கும் வழங்குவதற்கு தயாராக உள்ளோம். இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் ஐப்பசி 16 ஆம் திகதி இந்த வேலைத்திட்டமானது அன்று முழுநாளும் நடைபெறும். அந்த வரிசையில் கிழக்கு மாகாணத்துக்கான இந்த இலவச விழிப்புணர்வு பயிற்சிநெறியானது மீன்பாடும் தேன்நாடாம் மட்டு மாநகரில் காந்தி பூங்கா அருகில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கிழக்கு மாகாண உருவகப்படுத்துதல் மருத்துவப்பயிற்சி மையமானது (Eastern Province Simulation Training Centre) ஐரோப்பிய இயக்கமீட்பு சபையின் (European Resuscitation Council) வழிகாட்டலில் இலங்கை மயக்கமருந்தியல் மற்றும் அதிதீவிர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் கல்லூரியுடன் (College of Anaesthesiologists & Intensivists of Sri Lanka) இணைந்து இந்த இலவச விழிப்புணர்வு பயிற்சிநெறியை நடாத்தவுள்ளது. அதில் நீங்களும் கலந்து கொண்டு பயிற்சி பெறுவதனூடாக உங்கள் நேசத்துக்குரியவர்களின் உயிரைக்காப்பதில் நீங்களும் எம்மோடு இணையலாம்.


இந்த வேலைத்திட்டத்தில் நீங்கள் எவ்வாறு பங்கெடுப்பது?


வைத்தியர்கள் என்ற ரீதியில் அதிக வேலைப்பழுவுடன் கடமைகளில் ஈடுபட்டுள்ளதால், இம்மாதம் முழுவதும் திட்டமிடப்பட்ட நாட்களில் இவ்வாறான பயிற்சி நெறிகளை இலவசமாக நடாத்துவதை மக்கள் சேவையெனக் கருதுகின்றோம். எனவே ஏதாவது ஒரு ஸ்தாபனம் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் அங்கு வந்து இலவசமாக இப்பயிற்சிநெறியை நடாத்த முடியும்.


தற்பொழுது இத்தேசிய வேலைத்திட்டத்திற்கு இலங்கை பொலிஸ் சேவை, 1990 அவசர நோயாளர் காவுவண்டிச் சேவை, அரச நிறுவனங்கள், தனியார் ஸ்தாபனங்கள், கல்வி நிறுவனங்கள், பிரபல கலைஞர்கள், முக்கியஸ்தர்கள் போன்ற பலதரப்பட்டோரின் பங்களிப்பு கிடைத்துள்ளன. இவர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இதற்காக பூரண பங்கெடுப்பு செய்கின்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கும் கொடையாளிகளுக்கும் இந்த மக்கள் சேவையை செய்கின்ற வைத்தியர்களாகிய நாம் நன்றி கூறுவதுடன் இப்பயிற்சிநெறியில் அதிகளவு கலந்து கொண்டு பூரண பங்களிப்பை வழங்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம்.


இறுதியாக எமது செய்தியானது திடீர் இதய நிறுத்தம் (Sudden Cardiac Arrest) ஏற்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு உங்கள் அனைவருக்கும் முடியும் என்பதாகும் (All Citizens Can Save a Life). பயனற்ற பார்வையாளர்களாக இருப்பதைவிடுத்து நீங்கள் அனைவரும் பயனுள்ள பங்காளிகளாக முடியும். இயன்றளவு விரைவாக உயிர் காக்கும் செயன்முறையை செயற்படுத்தி இதயத்தை மீளியக்கி, பின்பு பாதிக்கப்பட்ட நபரை அண்மையிலுள்ள வைத்தியசாலைக்கு பாதுகாப்பாகவும் விரைவாகவும் எடுத்து செல்லவேண்டும்.


“காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தில் மாணப்பெரிது – திருவள்ளுவர்”


ச. மதனழகன்

விசேட வைத்திய நிபுணர்

மயக்கமருந்தியல் மற்றும் அதிதீவிர சிகிச்சை வைத்திய நிபுணர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை.

 
 
 

留言


bottom of page