மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினால் உலக குருதி கொடையாளர் தினம் அனுஸ்டிப்பு
- TH-Batticaloa
- Jul 3, 2019
- 1 min read

உலகளாவிய ரீதியில் எத்தனை வகையான தானங்கள் காணப்பட்டாலும் உயிர்காக்கும் தானமாக இரத்ததானத்தினை குறிப்பிட்டால் மிகையாகாது. பிறருக்கு கொடுப்பதிலே அதியுயர் உயிர் காக்கும் சொத்தாக இரத்ததானம் விளங்குகிறது.
உலக குருதி கொடையாளர் தினம் எதிர்வரும் யூன் 14 ம் திகதி உலகளாவிய ரீதியில் அனைவராலும் அனுஸ்டிக்கப்பட இருப்பதனால் இந்நிகழ்வின் முன்னோடியாக இன்று (03.07.2019) எமது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினால் போதனா வைத்தியசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் மு.ப.9.00 மணிக்கு உலக குருதி கொடையாளர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. திருமதி.கலாரஞ்சனி கணேசலிங்கம் மற்றும் பிரதிப் பணிப்பாளர் Dr. திருமதி. தயாளினி சசிகுமார் அத்துடன் இரத்தவங்கிப் பிரிவின் வைத்திய நிபுணர் Dr. M.Z.ஜனூஸ் ஆகியோருடன் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் குருதி கொடையாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பாக சீயோன் தேவாலய தாக்குதலில் மரணமடைந்தவர்களில் R.ரமேஸ், R.சசிகுமார், S.அருண்பிரசாத், S.R. சுரான்க ஆகிய 4 குருதிக்கொடையாளிகளும் உள்ளடங்குவர். மேலும் குருதிக் கொடையாளர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் உரையாற்றும் போது, நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம். ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது அங்கு தேவைப்படுவது இரத்தம். அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினை செய்வதற்குச் சமம். எனவே இந்த இரத்ததானத்தினை வழங்க கூடியவர்கள் முன்வந்து வழங்கவேண்டும் என்பதுடன் பாதுகாப்பான முறையில் இரத்தத்தினை வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும் இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த உலக குருதி கொடையாளர் தினம் அனுஸ்டிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.
அவ்வகையான உயரிய சேவையை நினைவுகூருமுகமாவே இந்த தினம் அனைவராலும் உலக குருதி கொடையாளர் தினமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.





Comentários